Friday, May 15, 2009

முன்னுரை

இன்று(15.5.2009) இந்தியாவில் வாழும் கோடான கோடி மக்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும் நாள். ஆனால் நான் எடுத்த சில முடிவுகளால், இங்கிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே என்னை பெரிதும் பாதிக்கும் நிலையில் உள்ளேன்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு பெரும் வாலிப படையெடுப்பு நிகழும். இத்தருணத்தில் புறப்படும் ஒவ்வொரு விமானமும் பயணிகளுடன் அவர்களது கனவுகளையும் சுமந்து பறப்பதை பலர் உணர வாய்ப்பு இல்லை. பொருளாதார நெருக்கடி உலகில் வாழும் மக்கள் அனைவரையும் வெவ்வேறு அளவில் சோதிக்கின்ற தருணத்தில், இக்கனவுகளுக்கு எதிராக பல தடைகள் தோன்றுவது இயல்பே. அதுவே இந்நாட்டிலும் நடக்கிறது. வேலை வாய்ப்பில் இந்நாட்டவருக்கு முன்னுருமை , பிறநாட்டவருக்கு எதிராக சட்டங்கள் என பல உருவங்களில் தடைகள் நித்தம் முலைத்துக்கொண்டே உள்ளன.

என்னை சுற்றி பார்க்கிறேன்; சிலர் வேலை வாய்ப்பின்றி நாடு திரும்பிகொண்டிருக்கிறார்கள், வேறு சிலர் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு இயன்ற தூரம் செல்ல முயற்சிப்பதும் தெரிகிறது , இன்னும் சிலரோ எந்த ஒரு இலக்கும் இல்லா இன்ப வாழ்க்கையை வாழுகின்றனர். நான் வருத்தம் கலந்த குழப்பத்தோடு அனைத்தையும் பார்த்து வருகிறேன். தடைகளை தாண்டி சென்று, தங்கள் கனவுகளை எத்தனை மனிதர் நிறைவேற்றுவர்? காலம் பதில் சொல்லும்.

இந்த சுவாரசியமான நாட்களை ஒரு குறிப்பாக எழுதினால், பின்னொரு நாள் படிக்கும்போது இன்றைய இன்னல்கள் இனிமையான நினைவுகளாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் நான் இதை எழுதுகிறேன்.

பயணம் நெடுந்தொலைவு செல்லுமா என்பது தெரியவில்லை, சென்றால் படித்து ரசியுங்கள் அன்றேல் மன்னித்து அருளுங்கள்.

இப்படிக்கு
நிகரிலான்